அதிர்ச்சி... மனைவி, 3 பெண் குழந்தைகளையும் கொன்று விட்டு தப்பியோடிய கணவன்!
தலைநகர் டெல்லியில் சூதாட்டப் பழக்கத்தால் ஏற்பட்ட கடன் சுமை காரணமாக, காய்கறி வியாபாரி ஒருவர் தனது மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகளைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி அசாத்பூர் மண்டி பகுதியைச் சேர்ந்த முன்ஜன் கேவாட் என்ற காய்கறி வியாபாரி, ஆன்லைன் மற்றும் நேரடி சூதாட்டத்திற்கு அடிமையாகி இருந்ததாகத் தெரிகிறது. இதனால் அவருக்குப் பல லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டுள்ளது. சூதாட்டத்தில் பணத்தை இழந்த கேவாட்டிற்கு, கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். கடன் சுமை அதிகரித்ததால், குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ள அவர் முடிவெடுத்துள்ளார்.

கடந்த புதன்கிழமை அன்று, தனது மனைவி அனிதா (27) மற்றும் 5, 4, 3 வயதுடைய மூன்று பெண் குழந்தைகளை அவர் கழுத்தறுத்துக் கொடூரமாகக் கொலை செய்தார். குடும்பத்தினர் அனைவரையும் கொன்றுவிட்டு, தான் தற்கொலை செய்து கொள்ளத் துணிவில்லாமல் கேவாட் அங்கிருந்து தப்பி ஓடினார். ரயில் மூலம் ராஜஸ்தான் மாநிலத்திற்குச் சென்று தலைமறைவானார்.

அனிதாவின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த நான்கு பேரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய கொலையாளி கேவாட்டைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. தொழில்நுட்ப உதவியுடன் அவர் இருக்கும் இடத்தை மோப்பம் பிடித்த போலீசார், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் வைத்து அவரைக் கைது செய்தனர். கைதான கேவாட் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். கடன் கொடுத்தவர்களின் மிரட்டல் காரணமாகவே இந்தத் தீவிர முடிவை எடுத்ததாக அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி மற்றும் இதர சூதாட்டப் பழக்கங்களால் சமீபகாலமாக உயிரிழப்புகள் அதிகரித்து வருவது கவலைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது. கடன் பிரச்சினைகளால் பாதிக்கப்படுபவர்கள் தற்கொலை அல்லது இது போன்ற விபரீத முடிவுகளை எடுப்பதற்குப் பதிலாக, முறையான ஆலோசனைகளை நாட வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
