அதிர்ச்சி.. செல்போன் ரீசார்ஜ் கட்டணங்கள் 15% வரை உயர வாய்ப்பு!

 
செல்போன்

பெட்ரோல் மற்றும் டீசல் விலையைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள முன்னணித் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை அடுத்த 3 முதல் 4 மாதங்களுக்குள் 12 முதல் 15 சதவீதம் வரை உயர்த்தத் திட்டமிட்டுள்ளன. இந்தத் திடீர் கட்டண உயர்வுத் திட்டம் மொபைல் வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நிதி ஆய்வு நிறுவனமான 'சென்ட்ரம் இன்ஸ்டியூஷனல் ரிசர்ச்' வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கையின்படி,  நாடு முழுவதும் அதிவேக 4G மற்றும் அதிநவீன 5G இணையச் சேவைகளைத் தங்குதடையின்றி விரிவாக்கம் செய்வதற்காகத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான கோடிகளை முதலீடு செய்து வருகின்றன.

செல்போன், சோஷியல் மீடியா

புதிய அலைக்கற்றை வாங்குதல், தொலைத்தொடர்பு கோபுரங்களை நிர்வகித்தல் மற்றும் பராமரிப்புச் செலவுகள் என நிறுவனங்களின் ஒட்டுமொத்த செயல்பாட்டு மற்றும் நிர்வாகச் செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளன. செலவினங்களைச் சமன் செய்து தங்களது ஒரு பயனருக்கான சராசரி வருவாயை அதிகரிக்கும் நோக்கில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த 12% முதல் 15% வரையிலான கட்டண உயர்வை வாடிக்கையாளர்கள் மீது சுமத்த முடிவெடுத்துள்ளன.

செல்போன் ஹாக்

இந்தத் திட்டத்தின்படி, தற்போது வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வரும் வழக்கமான மாதாந்திர, காலாண்டு மற்றும் வருடாந்திர ரீசார்ஜ் திட்டங்களின் விலைகள் அடுத்த சில மாதங்களில் கணிசமாக உயரும். ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் சிரமப்பட்டு வரும் வேளையில், அன்றாட வாழ்க்கையின் முக்கிய அங்கமாக மாறிவிட்ட மொபைல் மற்றும் இணையச் சேவைகளுக்கான கட்டணமும் உயரப் போவதாக வெளியாகியுள்ள இந்த அறிக்கை நுகர்வோர்களைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்தக் கட்டண உயர்வு அமலுக்கு வரும் பட்சத்தில், நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் இது கூடுதல் நிதிப் பாரத்தை ஏற்படுத்தும் எனப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.