அதிர்ச்சி... 50க்கும் மேற்பட்டோர் பாதிப்பு... டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் உயிரிழப்பு!

 
டெங்கு

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் டெங்கு காய்ச்சலால் மேலும் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. போகநல்லூர் அருகே அமைந்துள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் கடந்த ஒரு மாதமாக டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சலின் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது.

இந்த முகாமில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே முகாமில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 13 வயது சிறுமி ஒருவர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்திருந்தார்.

உஷார்!! இந்த 5 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு !!

இந்நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நர்மளா (27) என்ற பெண், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஒரே முகாமில் குறுகிய காலத்தில் இருவர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளதால், கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் மருத்துவ முகாம்களை அமைத்து, கொசு ஒழிப்பு மற்றும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.