அதிர்ச்சி... பல தொகுதிகளில் தவெக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்க வாய்ப்பு... குளறுபடியால் தவிக்கும் தவெக!
முதல் முறையாகத் தேர்தல் களத்தைக் காணும் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க), வேட்புமனுத் தாக்கலிலேயே சில நடைமுறைச் சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, அக்கட்சித் தலைவர் விஜய் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களில் உள்ள முரண்பாடுகள் தற்போது விவாதப் பொருளாகியுள்ளன. விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார். இந்த இரு இடங்களிலும் அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களில் சில முக்கிய விவரங்கள் மாறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன:
பெரம்பூரில் தாக்கல் செய்த மனுவில் தன் மீது எப்.ஐ.ஆர் ஏதுமில்லை எனக் குறிப்பிட்டிருந்த நிலையில், திருச்சி மனுவில் இரண்டு வழக்குகள் (பெரம்பூர் பேரவள்ளூர் காவல் நிலைய வழக்கு மற்றும் 2025 மதுரை மாநாட்டு விவகாரம்) இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஒரு மனுவில் 52 என்றும், மற்றொரு மனுவில் 51 என்றும் வயது குறிப்பிடப்பட்டிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது.
பெரம்பூர் பிரசாரத்தின் போது போடப்பட்ட வழக்கை உடனடியாகத் திருச்சி மனுவில் சேர்த்ததாகவும், வயது தொடர்பான விபரங்களைச் சரிசெய்து திருத்தப்பட்ட வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளதாகவும் அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் மட்டுமல்லாது, அக்கட்சியின் வேட்பாளர்கள் பலரும் முறையாகப் பிரமாணப் பத்திரங்களை நிரப்புவதில் தடுமாற்றம் கண்டுள்ளனர். சொத்து விபரங்கள், கடன் விபரங்கள் மற்றும் குற்றப் பின்னணி குறித்த தகவல்களில் சிறு பிழைகள் இருந்தாலும் மனுக்கள் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் த.வெ.க வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பெரும் கலக்கம் நிலவுகிறது.
இதனைத் தமிழக வெற்றிக் கழகத்தின் 'அரசியல் முதிர்ச்சியின்மை' என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இருப்பினும், "புதிய கட்சி என்பதால் சில நடைமுறைத் தவறுகள் ஏற்படுவது இயல்பு, அதனைத் திருத்திக் கொள்வோம்" எனத் த.வெ.க ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெற உள்ளது. அப்போதுதான், எந்தெந்த மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன, எவை தள்ளுபடி செய்யப்பட்டன என்பது குறித்த இறுதித் தகவல் வெளிவரும். தகவல்களை மறைக்காமல், பிழைகளைத் திருத்தி அளித்திருந்தால் மனுக்கள் ஏற்கப்படவே அதிக வாய்ப்புள்ளதாகத் தேர்தல் துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், பல தொகுதிகளில் தவெக வேட்பாளர்களின் மனுக்கள் முழுமையாக நிரப்பப்படாமல் பிழைகளுடனே அளிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விஜய் வேட்புமனு விவகாரம் வெளியானதும், பலரும் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் மனுவில் தாங்கள் செய்த தவறுகள் குறித்து தெரிவித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
