பெரும் அதிர்ச்சி... இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் சதி... சுற்றுலாப் பயணிகள் போர்வையில் லஷ்கர்-இ-தொய்பா பயிற்சி!
பாகிஸ்தானில் இயங்கி வரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு, இந்தியா மீது கடல் வழியாக மீண்டும் ஒரு மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதலை நடத்தச் சதித் திட்டம் தீட்டி வருவதாக உளவுத்துறை வட்டாரங்கள் எச்சரித்துள்ளன. இதற்காகப் பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு அருகே உள்ள தீவில் சுற்றுலாப் பயணிகள் போர்வையில் பயங்கரவாதிகளுக்குக் தீவிரமான கடற்பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகக் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உளவுத்துறைக்குக் கிடைத்தத் ரகசியத் தகவல்களின்படி, பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் 'சார்னா தீவு' பகுதியில் இந்தப் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. இத்தீவு வழக்கமாகச் சூழலியல் சுற்றுலா மற்றும் 'ஸ்கூபா டைவிங்' விளையாட்டுகளுக்கு புகழ்பெற்ற பகுதியாகும். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் லஷ்கர் பயங்கரவாதிகள், தங்களைச் சாதாரணச் சுற்றுலாப் பயணிகளாகக் காட்டிக் கொண்டு கடல்சார் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

'தவா மரைன் விங்' மற்றும் லஷ்கரின் நிழல் அமைப்பான 'பாகிஸ்தான் மத்திய முஸ்லிம் லீக்' ஆகியவற்றின் மூலமாகப் பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் கடலுக்கடியில் நீந்துதல், ஆபத்தான ஆழ்கடல் ஸ்கூபா டைவிங் மற்றும் போர்க்காலக் கடல்சார் நடவடிக்கைகள் குறித்துத் தீவிரப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் போது லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் அரபிக்கடல் வழியாகப் படகில் ஊடுருவியே தாக்குதலை நடத்தினர். தற்போது மீண்டும் அதே பாணியில் இந்தியக் கடலோர எல்லைகள் மற்றும் முக்கிய நகரங்களைக் குறிவைத்து, கடல் வழியே ஊடுருவித் தாக்குதல் நடத்தும் திறனை வளர்த்துக் கொள்ள லஷ்கர் முயன்று வருகிறது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் இந்தச் சதித் திட்டம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, இந்தியக் கடற்படை, கடலோரக் காவல் படை மற்றும் இந்திய உளவு அமைப்புகள் அரபிக்கடல் மற்றும் இந்தியக் கடலோரப் பகுதிகளில் தங்களது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளன.
மீனவர்கள் மற்றும் கடலோரப் பகுதி பொதுமக்கள் சந்தேகத்திற்கிடமான நபர்களையோ அல்லது படகுகளையோ கண்டால் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
