அதிர்ச்சி... பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்வு!
சென்னை: ஈரான் - இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் பதற்றத்தால் உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, இந்தியாவின் முன்னணி தனியார் எரிபொருள் நிறுவனமான 'நயாரா' பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இன்று அதிரடியாக உயர்த்தியுள்ளது. பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இந்த விலை உயர்வு முடிவை நயாரா நிறுவனம் எடுத்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதலே அமலுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த விலை உயர்வு நயாரா நிறுவனத்தின் பெட்ரோல் பங்குகளில் மட்டுமே பொருந்தும். இந்தியா முழுவதும் சுமார் 7,000-க்கும் மேற்பட்ட நயாரா பெட்ரோல் பங்குகள் உள்ளன. பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) ஆகியவற்றின் பங்குகளில் தற்போதைய நிலவரப்படி விலையில் மாற்றம் அறிவிக்கப்படவில்லை. எனினும், ஒரு தனியார் நிறுவனம் விலையை உயர்த்தியுள்ளதால் மற்ற நிறுவனங்களும் விலையை உயர்த்துமா என்ற அச்சம் வாகன ஓட்டிகளிடையே எழுந்துள்ளது.
