அதிர்ச்சி.. 5வது மாடியில் இருந்து குதித்து சைக்ரியாடிஸ்ட் தற்கொலை!
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் மனநல மருத்துவர் ஒருவர் தனது குடியிருப்பின் 5வது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
காசியாபாத்தைச் சேர்ந்தவர் மனநல மருத்துவர் ஹேமிகா (40). இவர் ராஜ்நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். குடும்பப் பிரச்சினை காரணமாகக் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கணவரைப் பிரிந்து விவாகரத்து பெற்ற ஹேமிகா, தனியாக வசித்து வந்துள்ளார். விவாகரத்துக்குப் பிறகு அவர் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. தீவிர மன அழுத்தத்தில் இருந்த ஹேமிகா, நேற்று முன் தினம் இரவு தனது வீட்டின் 5வது மாடியில் இருந்து திடீரெனக் கீழே குதித்தார்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

பிறரின் மன அழுத்தத்தைப் போக்கும் மனநல மருத்துவர் ஒருவரே மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
