அதிர்ச்சி ரிப்போர்ட்... தமிழகத்தில் கழிவுநீர் தொட்டி துப்புரவுப் பணிகளில் கடந்த 10 வருடங்களில் 100 பேர் பலி!
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் துப்புரவுத் தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இந்நிலையில், தேசிய துப்புரவுத் தொழிலாளர் ஆணையம் இது குறித்த அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவர அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தேசிய துப்புரவுத் தொழிலாளர் ஆணையத்தின் தரவுகளின்படி, கடந்த 2016 முதல் 2026 வரையிலான 11 ஆண்டு காலகட்டத்தில் நாடு முழுவதும் கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் பணியின் போது மொத்தம் 773 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் இதுவரை 677 வழக்குகளுக்கு மட்டுமே முழுமையான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இந்த 11 ஆண்டு காலத்தில் அதிகபட்ச உயிரிழப்புகள் பதிவான மாநிலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா 100 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இது நாட்டிலேயே முதலிடம் என்பது குறிப்பிடத்தக்கது. உத்தரப் பிரதேசத்தில் 98 உயிரிழப்புகள். குஜராத்த்தில் 86 உயிரிழப்புகள், ஹரியானாவில் 85 உயிரிழப்புகள்.
2026-ஆம் ஆண்டு: நடப்பாண்டில் இதுவரை நாடு முழுவதும் 31 பேர் உயிரிழந்துள்ளனர் (அதிகபட்சமாக ஹரியானாவில் 8 பேர், மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் தலா 6 பேர்). இதில் 9 வழக்குகளுக்கு மட்டுமே முழு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 2025 மற்றும் 2024: முறையே 51 மற்றும் 54 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகங்கள், காவல்துறை மற்றும் மாநில அரசுத்துறைகளின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளின் அடிப்படையில்தான் இந்தத் தரவுகள் தொகுக்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட போதிலும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவல நிலையும், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றித் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவதும் இத்தகைய தொடர் உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணமாக அமைகிறது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
