அதிர்ச்சி... சொத்து தகராறில் மாமியாரை அரிவாளால் வெட்ட முயன்ற மருமகன்!

 
அரிவாள் சொத்து தகராறு மருமகன்

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சொத்து தகராறு காரணமாக 80 வயது முதியவரை அறையில் அடைத்து வைத்துத் துன்புறுத்தியதுடன், அவரை அரிவாளால் வெட்ட முயன்ற மருமகன் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பெருந்துறை செல்லகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி (80). இவரது கணவர் முத்துகிருஷ்ணன் கடந்த 2019ஆம் ஆண்டும், இவரது மகன் 2020ஆம் ஆண்டும் மறைந்துவிட்டனர். சரஸ்வதிக்கு காந்திமதி என்ற மூத்த மகளும், மற்றொரு இளைய மகளும் உள்ளனர்.

சரஸ்வதி தனது சொத்துக்களை இரு மகள்களுக்கும் சரிபாதியாகப் பிரித்துக் கொடுத்துள்ளார். தான் தற்போது வாழ்ந்து வரும் வீட்டைத் தனது காலத்திற்குப் பிறகு பிரித்துக் கொள்ள வேண்டும் என்றும், அதுவரை தன்னைத் தங்களோடு வைத்துப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனை விதித்திருந்தார்.

சொத்து கைக்கு வந்த பிறகு, மூத்த மகள் காந்திமதியும், அவரது கணவர் ராமலிங்கமும் கடந்த 2 ஆண்டுகளாகச் சரஸ்வதியை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லித் தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர். இது தொடர்பாகக் கடந்த மாதம் 10ஆம் தேதி ஏற்பட்ட தகராறில், பெருந்துறை போலீசார் ராமலிங்கத்தை அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஆனால், போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி கடந்த மாதம் 22ஆம் தேதி மருமகன் ராமலிங்கம், முதியவர் சரஸ்வதியை வலுக்கட்டாயமாக வீட்டின் ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளார். அவருக்கு உணவு மட்டும் கொடுத்து, குடிக்கத் தண்ணீர் கூட வழங்காமல் வீட்டை காலி செய்யுமாறு கொடுமைப்படுத்தியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாகக் கடந்த 1ஆம் தேதி சரஸ்வதியின் வீட்டிற்கு வந்த ராமலிங்கம், அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த சாப்பாட்டுத் தட்டைப் பிடுங்கி எறிந்துவிட்டு, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும், தான் மறைத்து எடுத்து வந்திருந்த அரிவாளைக் காட்டிச் சரஸ்வதியைக் கொலை செய்யப் பாய்ந்துள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாகப் படுக்கையறைக்குள் ஓடிச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டு உயிர் தப்பியுள்ளார். மருமகனின் இந்த அராஜகச் செயல்கள் அனைத்தும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி  கேமராக்களில் துல்லியமாகப் பதிவாகியிருந்தன.

இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து சரஸ்வதி பெருந்துறை டிஎஸ்பி அலுவலகத்தில் சிசிடிவி ஆதாரங்களுடன் புகார் மனு அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் பெருந்துறை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

மாமியாரைக் கொடுமைப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்த மருமகன் ராமலிங்கம் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் தற்பொழுது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாகியுள்ள ராமலிங்கத்தைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.