அதிர்ச்சி... மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை - மத்திய அரசு தகவல்!
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்குத் தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய அரசு அளித்த பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், மேகதாது அணைத் திட்டம் தொடர்பாக மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்திற்கு எழுத்துப்பூர்வமாகக் கேள்வி எழுப்பியிருந்தார். அதில், "கடந்த 2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பின்படி, காவிரியின் கீழ்நிலைப் பாசன மாநிலங்களான தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களின் முன்அனுமதி பெறாமல் கர்நாடகா மேகதாதுவில் புதிய அணைக் கட்டமைப்புகளை ஏற்படுத்த முடியாது என்பது உண்மையா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அன்புமணி ராமதாஸின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த மத்திய நீர் சக்தித் துறை அமைச்சகம், கர்நாடக அரசு மேகதாதுவில் குடிநீர் மற்றும் மின் திட்டத்திற்காக அணை கட்டுவதற்குத் தமிழக அரசின் தனியான முன்அனுமதி தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.
எனினும், இத்திட்டம் தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பரிசீலித்து வருவதாகவும், கீழ்நிலைப் பாசன மாநிலங்களின் உரிமைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை ஆணையம் உறுதி செய்யும் என்றும் மத்திய அரசு தனது பதிலில் குறிப்பிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழ்நாட்டின் விவசாயிகள் மற்றும் அரசியல் தலைவர்களிடையே பலத்த எதிர்ப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
