அதிர்ச்சி... தேக்கடி ஏரி வறண்டது... படகு சவாரிக்கு கடும் கட்டுப்பாடு - சுற்றுலா பயணிகள் ஏக்கம்
தமிழக - கேரள எல்லைப் பகுதியில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற தேக்கடி ஏரியின் நீர்மட்டம் பருவமழை பொய்த்ததால் கடுமையாகச் சரிந்துள்ளது. இதனால் படகு சவாரிகளுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
'எல் நினோ' காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை வழக்கமான அளவை விடக் கடுமையாகக் குறைந்துள்ளது. பருவமழைக் காலத்தில் மழை பெய்யாமல், கோடைகாலத்தை மிஞ்சும் அளவிற்கு வெயில் வாட்டி வதைப்பதால் தேக்கடி நீர் பிடிப்புப் பகுதிகள் வறண்டு வருகின்றன.
கடந்த ஆண்டு ஜூலை இறுதியில் 135.15 அடியாக இருந்த முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம், தற்போது 111.95 அடியாகக் சரிந்துள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 175 கன அடியாகவும், குடிநீருக்கான திறப்பு 256 கன அடியாகவும் மட்டுமே உள்ளது. நீர்மட்டம் மிக அடிமட்டத்தை எட்டியுள்ளதால் கம்பம் பள்ளத்தாக்கு பாசனத்திற்கு வழக்கமாக ஜூன் 1-இல் திறக்கப்படும் தண்ணீரும் திறக்கப்படவில்லை.

ஏரியில் நீர்மட்டம் குறைந்ததால் படகுகள் தரைதட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரிய படகுகளில் 60 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு, 40 சதவீத இருக்கைகள் காலியாகவே இயக்கப்படுகின்றன. ஏரி வறண்டு காணப்படுவதால் படகுத்துறைக்குச் செல்ல சுற்றுலா பயணிகள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
வனவிலங்குகளைப் படகில் சென்றபடியே கண்டுகளிக்கும் வாய்ப்பு குறைந்ததாலும், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாலும் தேக்கடிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து அப்பகுதியே களை இழந்து காணப்படுகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து நீர்மட்டம் உயர்ந்தால் மட்டுமே தேக்கடி ஏரி மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும்.
