அதிர்ச்சி... மெட்டா நிறுவனத்திற்கு ₹5,400 கோடி அபராதம் - அமெரிக்கா நீதிமன்றம் தீர்ப்பு!
இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய செயலிகள் மூலம் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாகவும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்களை மறைத்ததாகவும் தொடரப்பட்ட வழக்கில், மெட்டா நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் சுமார் ₹5,408 கோடி ($567 மில்லியன்) அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்குத் தொடரப்பட்டது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற முதல்கட்ட விசாரணையில், மெட்டா நிறுவனத்திற்கு $375 மில்லியன் (சுமார் ₹3,574 கோடி) அபராதம் விதிக்கப்பட்டது.

வழக்கின் 2-ஆம் கட்ட விசாரணையை முடித்துத் தீர்ப்பளித்த நீதிபதி பிரையன் பீட்ஷைட் , மெட்டா நிறுவனம் மேலும் $567 மில்லியன் (சுமார் ₹5,408 கோடி) இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதன் மூலம் மெட்டா செலுத்த வேண்டிய மொத்தத் தொகை $942 மில்லியனை எட்டியுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மனநல சிகிச்சை மற்றும் மறுவாழ்வுச் சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், தடுப்பு நடவடிக்கைகள், பரிசோதனை சேவைகள் மற்றும் இதர பராமரிப்புகளுக்காகச் செலவிடப்படும். இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை சிறுவர் கணக்குகளுக்கு 'புஷ் நோட்டிபிகேஷன்' அனுப்பக் கூடாது, மாதத்திற்கு 90 மணி நேரத்திற்கு மேல் செயலியைப் பயன்படுத்தக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு மாற்றங்களைச் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்களது சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தொடர்ந்து பாடுபட்டு வருவதாகவும், உண்மைக்கு மாறான இந்த நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
