அதிர்ச்சி... வந்தே பாரத் ரயில் தடம் புரண்டு விபத்து - புனே அருகில் பயங்கரம்!
இந்தியாவின் அதிநவீன மற்றும் அதிவேக ரயிலாகக் கருதப்படும் 'வந்தே பாரத்' ரயில், அதன் சேவைக் காலத்தில் முதல்முறையாகத் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் ரயில்வே வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை - சோலாப்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 22225) ரயில் புனே ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள 'டைமண்ட் கிராசிங்' (Diamond Crossing) எனப்படும் தண்டவாள இணைப்புப் பகுதியில் விபத்திற்குள்ளானது. நேற்று இரவு இந்த ரயில் புனே நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது, ஒரு பெட்டியின் சக்கரம் தண்டவாளத்தை விட்டு விலகியது.

ரயில் அந்தப் பகுதியில் மிக மெதுவான வேகத்தில் சென்று கொண்டிருந்ததால், பெரிய அளவிலான அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் எவ்விதக் காயமுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கடந்த 2019-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில்கள், இதுவரை மாடுகள் மோதியது போன்ற சிறு விபத்துகளைச் சந்தித்திருந்தாலும், தடம் புரள்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்து உயர்மட்டக் குழு விசாரனைக்கு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

வந்தே பாரத் ரயில்கள் 'கவச்' எனப்படும் தானியங்கி பாதுகாப்பு அமைப்பு மற்றும் உயர்தரத் தொழில்நுட்பம் கொண்டவை. இத்தகைய ரயிலே தடம் புரண்டிருப்பது, இந்திய ரயில்வேயின் தண்டவாளப் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு மேலாண்மை குறித்த விவாதங்களை மீண்டும் முன்னெடுத்துள்ளது.
