அதிர்ச்சி வீடியோ... கட்டடத்திற்குள் புகுந்த 13 அடி நீள ராஜ நாகம்... லாவகமாக மீட்டு வனப்பகுதியில் விட்ட பாம்பு பிடி வீரர்!
ஆந்திரப் பிரதேச மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள கே.ஜே. புரம் கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டடத்திற்குள் சுமார் 13 அடி நீளமுள்ள பிரம்மாண்ட ராஜ நாகம் ஒன்று புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியது.
அனகாபள்ளி மாவட்டம் கே.ஜே. புரம் கிராமத்தில் புதிய கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று காலை அந்தக் கட்டடத்தின் உட்பகுதியில் பிரம்மாண்ட உருவம் கொண்ட பாம்பு ஒன்று பதுங்கியிருப்பதைக் கண்ட பணியாளர்களும் அப்பகுதி மக்களும் அதிர்ச்சியடைந்து அலறியடித்து ஓடினர். உற்று நோக்கியபோது, அது உலகின் மிக நீளமான விஷப் பாம்பு இனமான சுமார் 13 அடி நீளமுள்ள ராஜ நாகம் என்பது தெரியவந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
பொதுமக்கள் உடனடியாகப் பாம்பு பிடிக்கும் நிபுணரான வெங்கடேசன் என்பவருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த அவர், கட்டடத்திற்குள் பதுங்கியிருந்த அந்த 13 அடி ராஜ நாகத்தை எவ்விதப் பாதிப்பும் இன்றி மிகுந்த எச்சரிக்கையுடனும் லாவகமாகவும் மீட்டார்.
பிடிக்கப்பட்ட ராஜ நாகத்தை ஒரு பையில் பாதுகாப்பாக அடைத்த வெங்கடேசன், பின்னர் அதனை மக்கள் நடமாட்டமில்லாத அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று பத்திரமாக விடுவித்தார்.
ஆபத்தான ராஜ நாகம் எந்தவித அசம்பாவிதமும் இன்றிப் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டதைத் தொடர்ந்து, கே.ஜே. புரம் கிராம மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
