அதிர்ச்சி வீடியோ... தந்தையின் கண் முன்னே 19 வயது மகனைக் கடித்துக் குதறிய புலி!

 
புலி

பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு அருகிலுள்ள கஹ்னா பகுதியில், சமூக வலைதளத்தில் 'டிக்டாக்' வீடியோ பதிவு செய்வதற்காகக் கூண்டிலிருந்து வெளியே விடப்பட்ட பெண் புலி ஆக்ரோஷமாகத் தாக்கியதில் 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். தனது தந்தை மற்றும் சகோதரரின் கண் முன்னே நடந்த இந்தக் கோரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

லாகூர் புறநகர்ப் பகுதியான கஹ்னாவில் தனியாருக்குச் சொந்தமான வனவிலங்கு இனப்பெருக்கப் பண்ணை ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பண்ணையில் தல்ஹா (19) என்ற இளைஞர் தனது தந்தை மற்றும் சகோதரர் ஹாஷிம் ஆகியோருடன் ஊழியராகப் பணியாற்றி வந்தார்.

கடந்த புதன்கிழமை அப்பண்ணைக்கு வந்த நௌமன் ஹசன் என்ற சமூக வலைதளப் பிரபலம், டிக்டாக் வீடியோ பதிவு செய்வதற்காகக் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த பெண் புலியை வெளியே திறந்து விடுமாறு கேட்டுள்ளார்.

அதன்பேரில் கூண்டிலிருந்து புலி வெளியே விடப்பட்டபோது, திடீரென ஆக்ரோஷமடைந்த அந்தப் புலி, பண்ணை ஊழியரான தல்ஹா மீது பாய்ந்து கடித்துக் குதறியது. தனது தந்தை மற்றும் சகோதரரின் கண் முன்னே தல்ஹா புலியிடம் சிக்கித் தவித்த காட்சி அங்கிருந்தவர்களை உறைய வைத்தது.

பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிய தல்ஹாவை உடனடியாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி தல்ஹா பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆரம்பத்தில் புலி தாக்கிய உண்மையை மறைக்கும் நோக்கில், வளர்ப்பு நாய் கடித்ததாலேயே தல்ஹாவுக்குக் காயம் ஏற்பட்டதாகக் கூறிப் பண்ணை நிர்வாகத் தரப்பில் விஷயத்தை மூடிமறைக்க முயற்சி நடந்துள்ளது. ஆனால், காவல்துறையின் தீவிர விசாரணையில் புலி தாக்கியதே மரணத்திற்குக் காரணம் என்பது அம்பலமானது. இச்சம்பவம் தொடர்பாகத் தனியார் பண்ணையின் உரிமையாளர் ஃபயாஸ் மற்றும் டிக்டாக் பிரபலம் நௌமன் ஹசன் ஆகிய இருவரையும் கஹ்னா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புலி

"பொழுதுபோக்கு அல்லது டிக்டாக் மோகத்திற்காக மனித உயிருக்கு ஆபத்து விளைவிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது" என லாகூர் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கடுமையாக எச்சரித்துள்ளது. மேலும், பாதுகாப்பு அலட்சியம் மற்றும் உண்மையை மறைக்க முயன்ற அனைத்துக் கோணங்களிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தாக்குதல் நடத்திய பெண் புலி தற்போது பாதுகாப்பாக வனவிலங்குத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தனியார் பண்ணையில் புலியை வளர்ப்பதற்கான முறையான அரசு உரிமங்கள் பெறப்பட்டிருந்தனவா மற்றும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனவா என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் விரிவான ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.