அதிர்ச்சி வீடியோ... காம்பவுண்ட் சுவரை இடித்துக்கொண்டு வீட்டிற்குள் தலைகீழாகக் கவிழ்ந்த கார்!

 
காம்பவுண்ட் கார்

கேரள மாநிலம் கோட்டயத்தில் ஓட்டுநர் கண் அயர்ந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார், வீட்டின் காம்பவுண்ட் சுவரை உடைத்துக் கொண்டு தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பாலா-தொடுபுழா சாலையில் உள்ள ஐன்கொம்பு பகுதியில், ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் அதிவேகமாக வந்த சிவப்பு நிற எஸ்.யு.வி கார் ஒன்று விபத்துக்குள்ளானது. காரை ஓட்டி வந்த ஓட்டுநர் லேசாகக் கண் அயர்ந்ததே இந்த விபத்துக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.


வேகமாக வந்த கார், வீட்டின் எல்லைச் சுவரில் பலமாக மோதி, காற்றில் பறந்து சுழன்றபடி தோட்டத்திற்குள் தலைகீழாகப் பாய்ந்து கவிழ்ந்தது. மோதிய வேகத்தில் சுவரின் இடிபாடுகளும் காரில் இருந்த பொருட்களும் காம்பவுண்ட் முழுவதும் சிதறின.

காரில் பயணித்தவர்கள் முதலகோடம் பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மலரிக்கல் பகுதிக்குச் சென்றுவிட்டுத் திரும்பியபோது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. நல்வாய்ப்பாக காரில் இருந்த அனைவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

விபத்துச் சத்தம் கேட்டு ஓடிவந்த வீட்டின் உரிமையாளர்களும் அக்கம் பக்கத்தினரும் தலைகீழாகக் கவிழ்ந்த காரில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டனர். இது தொடர்பான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.