அதிர்ச்சி வீடியோ... கேஸ் சிலிண்டரில் தண்ணீர் நிரப்பி நூதன மோசடி!
சமையல் எரிவாயு சிலிண்டரில் கேஸிற்குப் பதிலாகத் தண்ணீரை நிரப்பி விநியோகம் செய்யும் அதிர்ச்சியூட்டும் மோசடி ஒன்று உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
லக்னோவின் விகாஸ் நகர் பகுதியில் உள்ள எரிவாயு ஏஜென்சி ஒன்றில் பணிபுரியும் ஊழியர், ரகசியமான இடத்தில் வைத்துப் புதிய சிலிண்டர்களில் தண்ணீரை நிரப்பிக் கொண்டிருந்தார். இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் ரகசியமாகப் படம்பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
சிலிண்டரின் எடையைச் சரியாகக் காட்டுவதற்காக, அதில் உள்ள குறிப்பிட்ட அளவு கேஸைத் திருடிவிட்டு, அதற்குப் பதிலாகத் தண்ணீரை நிரப்பி வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யத் திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு தண்ணீரை நிரப்புவதால் வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த அளவு எரிவாயு கிடைப்பது மட்டுமல்லாமல், அடுப்பு எரியும் போது தீ விபத்துக்கள் ஏற்படவும் அல்லது சிலிண்டர் துருப்பிடித்து வெடிக்கவும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவியதை அடுத்து, சம்பந்தப்பட்ட கேஸ் ஏஜென்சி மற்றும் ஊழியர் மீது வழக்குப் பதிவு செய்ய அம்மாநில உணவு மற்றும் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் சிலிண்டரை வாங்கும்போது அதன் எடையைச் சரிபார்ப்பதுடன், சீல் சரியாக உள்ளதா என்பதையும் உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
