அதிர்ச்சி வீடியோ... கயிறு இழுக்கும் போட்டியில் ரோப் அறுந்ததால் பொத்தென கீழே விழுந்த அமைச்சர் லோகேஷ்!

 
லோகேஷ்

சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழகப் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இடையே பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் அமைச்சர் லோகேஷ் உற்சாகத்துடன் பங்கேற்று, கயிற்றைப் பிடித்து பலத்தைக்காட்டி இழுத்தார்.

இரு தரப்பினரும் மிகக் கடுமையாக விசை கொடுத்து இழுத்தபோது, எதிர்பாராதவிதமாகக் கயிறு திடீரென நடுவில் அறுந்தது. இதனால் நிலைதடுமாறிய அமைச்சர் லோகேஷ் உட்படப் பங்கேற்பாளர்கள் அனைவரும் பொத்தெனத் தரையில் விழுந்தனர். அமைச்சர் திடீரெனக் கீழே விழுந்ததைக் கண்டு அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் பதறியடித்தனர். உடனடியாகப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் விரைந்து சென்று அமைச்சரைத் தூக்கிவிட்டனர்.

கீழே விழுந்த போதிலும், எவ்விதக் காயமுமின்றி உடனடியாக எழுந்த அமைச்சர் லோகேஷ், சிரித்தபடியே ஓய்வறைக்கு நகர்ந்து சென்றார். சில நிமிடங்கள் ஓய்வெடுத்த பின்னர், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.

அமைச்சர் லோகேஷ்

அமைச்சர் லோகேஷ் கயிறு இழுக்கும் போட்டியின் போது கீழே விழுந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. அமைச்சர் பங்கேற்கும் ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்யும் போது, பயன்பாட்டில் உள்ள கயிற்றின் தரத்தைச் சரிபார்க்காமல் அலட்சியமாகச் செயல்பட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது சமூக வலைத்தளப் பயனர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.