அதிர்ச்சி வீடியோ... கேரளாவில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட பேருந்துகள் - 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை அருகே நடைபெற்ற கோர சாலை விபத்தில், இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் ஓட்டுநர்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை அருகே உள்ள நெல்லிக்குன்னம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை இரண்டு தனியார் பேருந்துகள் எதிரெதிர் திசையில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தன. அப்போது எதிர்பாராதவிதமாக அந்தப் பேருந்துகள் இரண்டும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கோர விபத்தில் இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளுடன் சேர்த்து 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர், காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அதிவேகமாக வந்து விபத்தை ஏற்படுத்திய விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
