அதிர்ச்சி வீடியோ..தேவாலயத்தில் வழிபாட்டின் போது சிலுவை விழுந்து பாதிரியார் பலி!

 
தேவாலயம் பாதிரியார் சிலுவை

ஈக்வடார் நாட்டின் குவாயாகில் நகரில் உள்ள நூஸ்ட்ரா செனோரா டெல் பெர்பெத்து சொக்கோரோ கத்தோலிக்கத் தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டின் போது நடந்த கொடூர விபத்தில் பாதிரியார் உயிரிழந்தார்.

நேற்று வழக்கமான திருப்பலி வழிபாடு நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த நிகழ்வு இணையம் வழியாக உலகெங்கிலும் உள்ள பக்தர்களுக்காக நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. வழிபாடு தொடங்கி சுமார் 27 நிமிடங்கள் கழிந்த நிலையில், பீடத்திற்குப் பின்புறம் சுவரில் பொருத்தப்பட்டிருந்த மிகப்பெரிய, கனமான மரத்தாலான சிலுவை திடீரென பாதிரியார் மீது பலமாகச் சரிந்து விழுந்தது.  இதில் ரெடெம்ப்டோரிஸ்ட் மதச்சபையைச் சேர்ந்த பாதிரியார் பாட்ரிசியோ அல்ப்ரெடோ சாஞ்ச்ஸ் மோலினாரி உயிரிழந்தார். 

சிலுவை சரிந்து பாதிரியாரின் தலையிலும் உடலிலும் பலமாகத் தாக்கிய காட்சியை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்த பக்தர்களும், வழிபாட்டில் கலந்து கொண்டவர்களும் பெரும் அதிர்ச்சியடைந்தனர். 

இடிபாடுகளில் சிக்கிப் பலத்த காயமடைந்த பாதிரியாரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுமார் 4 மணி நேரத்திற்குப் பிறகு அவர் உயிரிழந்தார்.

தேவாலயம் பாதிரியார் சிலுவை

பாதிரியாரின் மறைவை குவாயாகில் பேராயப் பேரவை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது. வழிபாட்டின் நடுவே நடந்த இந்த துரதிர்ஷ்டவசமான விபத்து அப்பகுதி மக்களையும், கத்தோலிக்கத் திருச்சபையினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.