அதிர்ச்சி வீடியோ... மேடையில் பெண் நடனக் கலைஞரை அறைந்த காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

 
நடனம்

பீகார் மாநிலம் பெகுசராயில் நடைபெற்ற விழாவில், பெண் நடனக் கலைஞர் ஒருவரை மேடையிலேயே தாக்கி, தனது சேவைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டல் விடுத்த காவல் உதவி ஆய்வாளர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட இந்தச் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகிப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில் அண்மையில் சிலை விசர்ஜன் (துர்க்கை சிலை கரைப்பு) நிகழ்வு நடைபெற்றது. இந்த விழாவையொட்டிப் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்காகக் கலை நிகழ்ச்சிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் அனில் குமார் சிங், மேடையில் நடனமாடிக் கொண்டிருந்த பெண் நடனக் கலைஞரிடம் தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

நடனக் கலைஞர் இதற்கு எதிர்ப்பைத் தெரிவித்ததும், ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் அனில் குமார் சிங், அனைவரது முன்னிலையிலும் மேடையில் ஏறி அந்தப் பெண் நடனக் கலைஞரின் முகத்தில் ஓங்கி அறைந்துள்ளார். மேலும், இந்தச் சம்பவத்தைத் தட்டிக்கேட்க வந்த விழா அமைப்பாளர்களிடம் முறைகேடாக நடந்து கொண்டதுடன், தான் வைத்திருந்த துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.


காவல் உதவி ஆய்வாளர் பெண் நடனக் கலைஞரை மேடையில் தாக்கும் இந்தக் கொடூரக் காட்சிகள் அங்கிருந்த சிலரால் மொபைல் போனில் படம் பிடிக்கப்பட்டுச் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டன. இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி, காவல்துறையின் செயல்பாட்டிற்குப் பொதுமக்கள் மத்தியிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் கடும் கண்டனங்கள் குவிந்தன.

இச்சம்பவம் குறித்து மூத்த காவல் அதிகாரிகளுக்குப் புகார்கள் சென்றடைந்த நிலையில், முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் அதிகாரம் துஷ்பிரயோகம் செய்த காவல் உதவி ஆய்வாளர் அனில் குமார் சிங்கை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அவர் மீது துறைரீதியான தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், தவறு செய்த அதிகாரி மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.