அதிர்ச்சி வீடியோ... கால்பந்து போட்டியில் கோல்கீப்பருடன் மோதல் - சுருண்டு விழுந்து இளம் வீரர் உயிரிழப்பு!

 
கால்பந்து கால்பந்து

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது, எதிரணி கோல்கீப்பருடன் ஏற்பட்ட பயங்கர மோதலில் இம்மானுவேல் என்ற இளம் கால்பந்து வீரர் மைதானத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் விளையாட்டு உலகில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கானாவில் உள்ளூர் அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான கால்பந்து போட்டி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. போட்டியின் போது, திறமையான இளம் ஆட்டக்காரரான இம்மானுவேல், எதிரணியின் தடுப்பாட்டக்காரர்களைத் தாண்டி கோல் போடுவதற்காகப் பந்தோடு மிக வேகமாக ஓடி வந்துள்ளார்.

அப்போது, பந்து கோல் எல்லைக்குள் வராமல் தடுப்பதற்காக எதிரணியின் கோல்கீப்பர் தனது எல்லையை விட்டு முன்னோக்கிப் பாய்ந்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக, இருவருமே மிக அதிவேகத்தில் வந்ததால் கட்டுப்படுத்த முடியாமல் ஒருவரோடு ஒருவர் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இந்த மோதலின் போது, பந்தைத் தட்டிவிட முயன்ற கோல்கீப்பரின் கால், இம்மானுவேலின் முகத்தில் மிக பலமாகத் தாக்கியுள்ளது.

முகத்தில் பலத்த அடிபட்ட அடுத்த கணமே, இம்மானுவேல் மைதானத்திலேயே சுருண்டு விழுந்து மயங்கினார். பதறியடித்த சக வீரர்களும், நடுவரும் உடனடியாக மருத்துவக் குழுவினரை மைதானத்திற்குள் அழைத்தனர். மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து முதலுதவி அளித்து, அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் மைதானத்திலேயே ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் பரிசோதித்துத் தெரிவித்தனர்.

கால்பந்து

கானாவின் வளர்ந்து வரும் இளம் கால்பந்து நட்சத்திரமாகப் பார்க்கப்பட்ட இம்மானுவேல், ஆடுகளத்திலேயே விளையாட்டு விபரீதமாகி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடமும், கால்பந்து ரசிகர்களிடையேயும் பெரும் சோக அலைகளை உருவாக்கியுள்ளது. இச்சம்பவம் குறித்து உள்ளூர் கால்பந்து சம்மேளனம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.