அதிர்ச்சி வீடியோ... அமைச்சர் கலந்துகொண்ட அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த தவெக நிர்வாகி!
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்ட போது, தமிழக வெற்றி கழக நிர்வாகி ஒருவர் சிரித்துப் பேசி அவமதித்ததாக எழுந்த குற்றச்சாட்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, அரசு மேற்கொண்டு வரும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்துப் பொதுமக்களிடையே விரிவாக உரையாற்றினார். மேலும், மாவட்டப் பொறுப்பு அமைச்சர் ராஜீவ், மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சித் சிங், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திமு ராஜேந்திரன் உள்ளிட்ட பல அரசு அதிகாரிகளும் முக்கியப் பிரமுகர்களும் இதில் கலந்துகொண்டனர்.
விழாவின் தொடக்கமாக முறைப்படி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இசைக்கப்பட்டது. அப்போது மேடையில் இருந்த சிறப்பு விருந்தினர்கள், மருத்துவமனைப் பணியாளர்கள் மற்றும் கலந்துகொண்ட பொதுமக்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். ஆனால், அந்த சமயத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தென்காசி மத்திய மாவட்டச் செயலாளரான ராஜ பிரகாஷ், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதை அளிக்காமல் தனது அருகில் நின்றவருடன் உற்சாகமாகச் சிரித்துப் பேசி மகிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
அரசு விழா ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும் போது பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்ட இந்த அவமதிப்புச் செயல் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடையே கடும் அதிர்ச்சியையும் முகச்சுளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.<
