அதிர்ச்சி வீடியோ... திமுக விழாவில் பரபரப்பு... லாரியில் சிக்கி திமுக நிர்வாகியின் கால் நசுங்கியது!
கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக அலுவலகத் திறப்பு விழாவில் நடந்த விபத்து கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூலூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தளபதி முருகேசன், இன்று தனது தேர்தல் அலுவலகத்தைத் திறப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். இதற்காகக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அலுவலகத்தின் முன்பு கூடியிருந்தனர். விழா நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், திமுக தொண்டர் ஒருவர் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த பாரம் ஏற்றிய லாரி ஒன்று எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் அந்தத் தொண்டரின் வலது கால் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி துண்டாகும் நிலையில் நசுங்கியது. இரத்த வெள்ளத்தில் சரிந்த அவரைப் பார்த்த சக தொண்டர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
அலுவலகத் திறப்பு விழாவிற்கு வந்திருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக லாரியைத் தடுத்து நிறுத்தினர். படுகாயமடைந்த நிர்வாகியை மீட்ட கட்சியினர், உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

வேட்பாளர் அலுவலகத் திறப்பு விழா தொடங்கிய சில நிமிடங்களிலேயே இந்த விபத்து நேர்ந்ததால், விழா நடைபெற்ற பகுதி முழுவதும் பெரும் பரபரப்பும் சோகமும் நிலவியது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விபத்து குறித்து லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை தூத்துக்குடியில் விஜயின் பரப்புரை பயணத்தின் போது பைக் விபத்து ஏற்பட்ட நிலையில், தற்போது கோவையில் திமுக விழாவிலும் விபத்து ஏற்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் வாகன நெரிசலும், சாலை விதிகளைக் கடைபிடிக்காததும் இத்தகைய விபத்துகளுக்குக் காரணமாக அமைவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
