அதிர்ச்சி வீடியோ... அரசுப் பள்ளியில் அரங்கேறிய அவலம்... மாணவர் சேர்க்கைக்கு லஞ்சம்?" - நயினார் நாகேந்திரன்!

 
லஞ்சம் லஞ்சம்

திருப்பூரில் உள்ள புகழ்பெற்ற நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஏழை எளிய மாணவர்களிடம் சேர்க்கை படிவம் வழங்க லஞ்சம் பெறப்பட்ட விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த ஊழல் முறைகேட்டைக் கடுமையாகக் கண்டித்துள்ள பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக அரசை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளையும், கோரிக்கைகளையும் முன்வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திருப்பூர் நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய கல்வி ஆண்டிற்கான பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பள்ளியில் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்களை வாங்குவதற்காக வந்த ஏழை எளிய மாணவர்களிடம், அங்குள்ள பள்ளி ஊழியர் ஒருவர் தலா 250 ரூபாய் சட்டவிரோதமாக லஞ்சம் பெறும் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ பெற்றோர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த லஞ்ச விவகாரத்தை முன்வைத்து, தற்போதைய தவெக அரசை பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாகச் சாடியுள்ளார். "கல்வி கற்கும் ஆலயங்களான அரசுப் பள்ளிகளிலேயே இத்தகைய ஊழல் முறைகேடுகள் நடப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். கொள்கைத் தெளிவின்றி வெறும் மேடைகளில் மட்டும் 'மாற்று ஆட்சி' தரப்போவதாக முழங்கும் முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், அரசுப் பள்ளிகளில் நடக்கும் இத்தகைய அடிமட்ட ஊழல்களுக்கு என்ன தீர்வு வைத்திருக்கிறார் என்பதை மக்கள் மத்தியில் விளக்க வேண்டும்."

அரசுப் பள்ளிகளின் நிர்வாகச் சீர்கேட்டிற்குப் போதிய அதிகாரிகள் இல்லாததே காரணம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,800 தலைமையாசிரியர் பணியிடங்கள் மற்றும் 20 மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களை தவெக அரசு உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் நிரப்ப முன்வர வேண்டும்.

பள்ளிகளில் முறையான வழிகாட்டுதல் மற்றும் நிர்வாகக் கண்காணிப்பை உறுதி செய்ய இப்பணியிடங்களை விரைந்து நிரப்புவது அவசியமாகும். மேலும், திருப்பூரில் லஞ்சம் வாங்கிய சம்பவத்தில் தொடர்புடைய பள்ளி ஊழியர் மற்றும் இதற்குத் துணைபோன பள்ளி நிர்வாகத்தின் மீது உடனடியாகத் துறைரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி எந்தவொரு அரசுப் பள்ளியிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடக்காமல் ஆளும் அரசு கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.