பகீர்... காஷ்மீரில் மாயமான 30 பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானில் ஆயுதப் பயிற்சி... இந்தியா முழுவதும் அமைதியை சீர்குலைக்க சதித் திட்டம்!
ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் கடந்த 1991 முதல் 2003-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மாயமான 30 பயங்கரவாதிகள், பாகிஸ்தானுக்குத் தப்பிச் சென்று ஆயுதப் பயிற்சி பெற்று வருவது கண்டறியப்பட்டுள்ளது. காஷ்மீர் மட்டுமின்றி இந்தியா முழுவதும் நாசவேலைகளில் ஈடுபட்டு அமைதியைச் சீர்குலைக்கும் நோக்கில் இவர்கள் செயல்பட்டு வருவதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறைத் தலைவர் (டி.ஜி.பி.) நலின் பிரபாத் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாத அமைப்புகள், காஷ்மீர் இளைஞர்களை மூளைச்சலவை செய்து தங்கள் இயக்கங்களில் சேர்த்து வருகின்றன. அந்த வகையில், ரியாசி மாவட்டத்தின் மகோர் மற்றும் சஸ்சனா பகுதிகளிலிருந்து கடந்த 1991 முதல் 2003-ஆம் ஆண்டு வரை மாயமான 30 பேர், ஆயுதப் பயிற்சி பெறுவதற்காக எல்லை தாண்டிப் பாகிஸ்தானுக்குச் சென்றிருப்பது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்துத் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள காஷ்மீர் டி.ஜி.பி. நலின் பிரபாத், “ரியாசி மாவட்டத்திலிருந்து மாயமான 30 பேரும் தற்போது பாகிஸ்தானில் தங்கியிருந்து ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்புக்காகப் பணியாற்றி வருகின்றனர். இந்தியாவுக்கு எதிரான நாசவேலைகளுக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ள இவர்கள், பயங்கரவாதிகளுக்குப் பணம், ஆயுதம் மற்றும் வெடிபொருட்களை விநியோகித்தல், காஷ்மீரில் பயங்கரவாதத்தைப் பரப்புதல் மற்றும் நாசவேலைகளுக்காக உள்ளூர் இளைஞர்களை மூளைச்சலவை செய்து பணியில் அமர்த்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்குத் தப்பிச் சென்ற பயங்கரவாதிகளுக்கு எதிராகக் கடந்த 2024-ஆம் ஆண்டு மகோர் காவல் நிலையத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், இந்தப் பயங்கரவாதிகளில் 5 பேர் காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதற்காகத் தங்களது சொந்த நிலங்களை விற்றுப் பணம் திரட்டியது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களது சொத்துகளைக் காவல்துறையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

நிலத்தை விற்று நிதி திரட்டிய 5 பேர் உட்பட, ரியாசி மாவட்டத்திலிருந்து மாயமாகி பாகிஸ்தானில் ஆயுதப் பயிற்சி பெற்று வரும் 30 பயங்கரவாதிகளின் முழுப் பெயர்ப் பட்டியலையும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் அமைதியைச் சீர்குலைக்கும் இவர்களது சதித் திட்டம் அம்பலமாகியுள்ள நிலையில், பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
