அதிர்ச்சி... நெஞ்சின் மீது கலசம் வைத்து 9 நாட்கள் தீவிர விரதம் இருந்த பெண் உயிரிழப்பு!

 
விரதம் பலி கலசம்

பீகார் மாநிலத்தில் நவராத்திரி வழிபாட்டிற்காகத் தொடர்ந்து 9 நாட்கள் உணவு, தண்ணீரின்றி கடுமையான விரதம் இருந்த பெண், சடங்குகள் முடிந்த மறுநாளே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் திருவேணிகஞ்ச் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு வினோதமான முறையில் தீவிர விரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.

கடந்த 9 நாட்களாகத் தனது நெஞ்சின் மீது பச்சரிசி, பாக்கு மற்றும் நாணயங்கள் வைக்கப்பட்ட மண் கலசத்தை ஏந்தியவாறு, ஒரே இடத்தில் படுத்த நிலையில் உணவு மற்றும் தண்ணீர் எதுவுமின்றி அவர் கடுமையான விரதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். நவராத்திரி சடங்குகள் அனைத்தும் முடிவடைந்த மறுநாளே அந்தப் பெண் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து 9 நாட்கள் ஒரே இடத்தில் அசையாமல் படுத்திருந்ததாலும், சொட்டுத் தண்ணீரைக் கூட அருந்தாமல் இருந்ததாலும் அவருக்குக் கடுமையான நீர்ச்சத்து குறைபாடு மற்றும் அதைத் தொடர்ந்து இதய பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.