செக் பண்ணுங்க... பொருந்தாத காலணிகளால் பாதங்களில் வலி வரக்கூடும்... நிபுணர்கள் எச்சரிக்கை!

 
shoe shoe

நமது உடலின் ஒட்டுமொத்த எடையையும் தாங்கும் பாதங்களைப் பராமரிப்பதில் காலணிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால் தங்களின் கால்களுக்குச் சரியாகப் பொருந்தாத அளவுள்ள ஷூக்களை அணிவது கடுமையான உடல் நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தவறான அளவுள்ள காலணிகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் பாதங்களில் வலி ஏற்படுவதுடன், காலப்போக்கில் அது தசை மற்றும் எலும்புகளையும் சேர்த்துப் பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

புதிதாக ஷூ வாங்கச் செல்பவர்கள் சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவது நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதன்படி காலணிகள் வாங்கும் முன்பாக உங்களது பாதங்களின் அளவை ஒரு காகிதத்தில் துல்லியமாக வரைந்து கொள்ள வேண்டும். அவ்வாறு வரைந்த அளவைக் கொண்டு, தற்போது வீட்டில் நீங்கள் பயன்படுத்தி வரும் பழைய காலணிகளின் அளவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்துப் புதியவற்றைத் தேர்வு செய்வது மிகவும் சிறந்தது.

ஒவ்வொரு நிறுவனத்தின் தயாரிப்புகளிலும் அளவுகளில் சிறிய மாற்றங்கள் இருக்கக் கூடும் என்பதால் வெறும் எண்களை மட்டும் நம்பி வாங்கக் கூடாது. கடைகளில் காலணிகளை அணிந்து சிறிது தூரம் நடந்து பார்த்துப் பாதங்களுக்கு எவ்வித அழுத்தமும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். சரியான அளவுள்ள காலணிகளைத் தேர்ந்தெடுத்து அணிவதன் மூலமாகப் பாதங்களில் ஏற்படும் தேவையற்ற வலிகளையும், பின்னாளில் வரும் எலும்புப் பாதிப்புகளையும் எளிதாகத் தவிர்க்கலாம்.