"நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைப்பதா?" - விஜய்க்கு கி.வீரமணி கடும் கண்டனம்!

 
வீரமணி வீரமணி

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தைத் தொடர்ந்து, அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில், ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்ற பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ ரமேஷுக்கு இந்து சமய அறநிலையத்துறை வழங்கப்பட்டிருப்பதற்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தனது கடுமையான கண்டனத்தையும், அதிர்ச்சியையும் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த 7 பேருக்கு அமைச்சரவையில் இடம் அளித்திருப்பதை வரவேற்றுள்ள அதே வேளையில், 3 சதவீதம் மட்டுமே உள்ள பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த இருவருக்கு 6 சதவீதம் அமைச்சர் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருப்பது அதிகப்படியானது என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிக்கட்சி ஆட்சியில் கோயில்களில் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்கவும், சமூகப் புரட்சியை ஏற்படுத்தவும் கொண்டு வரப்பட்ட இந்து சமய அறநிலையத்துறையை, அதே சமூகத்தைச் சேர்ந்த ஒருவரிடம் ஒப்படைப்பது சமூகநீதிக்குப் பேராபத்தாக முடியும் என்று எச்சரித்துள்ளார்.

கி.வீரமணி

ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங் பரிவார் கூட்டமைப்புகள் "கோயில்களை மீட்போம்" என்ற பெயரில் அறநிலையத்துறையை ஒழிக்கப் பல்வேறு பொய் வழக்குகளைத் தொடர்ந்து வரும் வேளையில், இத்துறையின் முதன்மைச் செயலாளராகப் பார்ப்பன அம்மையார் ஒருவரும், தற்போது அமைச்சராக ரமேஷும் நியமிக்கப்பட்டிருப்பது ‘நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைப்பதற்கு’ ஒப்பாகும் என்று கி.வீரமணி சாடியுள்ளார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் தொடர்பான முக்கிய வழக்குகள் நிலுவையில் உள்ள இந்தச் சூழலில், ஆர்.எஸ்.எஸ் சகவாசம் இல்லாத பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையோ அல்லது ஒரு பெண் அமைச்சரையோ இந்நேரத்தில் நியமித்திருப்பதே உண்மையான மாற்றமாக இருந்திருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் உடனடியாக விழித்துக் கொண்டு, 2000 ஆண்டுக்கால ஆதிக்கக் குழியில் மீண்டும் சமூகநீதித் தேரைத் தள்ளிவிடாமல் இருக்க, இந்து சமய அறநிலையத்துறைக்குப் பார்ப்பனரல்லாத ஒரு அமைச்சரையும், செயலரையும் உடனடியாக நியமிக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய்க்கு கி.வீரமணி தனது அறிக்கையின் வாயிலாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.