கனடாவில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி, 6 பேர் படுகாயம்!

 
கனடா துப்பாக்கிச்சூடு

கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெற்ற மக்கள் நடமாட்டம் மிகுந்த வீதி திருவிழா ஒன்றில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டொராண்டோ நகரில் உள்ள ஒரு முக்கியப் பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய வீதி திருவிழா கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், சிறுவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு திருவிழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது கூட்டத்திற்குள் புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர், தங்களது கைகளில் வைத்திருந்த அதிநவீனத் துப்பாக்கிகளால் அங்கிருந்த பொதுமக்கள் மீது திடீரெனத் சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.

துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்தத் தாக்குதலில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவசரக் கால மீட்புக் குழுவினர் மற்றும் காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் இருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுமக்கள் மீது கொடூரத் தாக்குதலை நடத்திவிட்டு, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தித் தப்பியோடிய மர்ம நபர்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வரும் டொராண்டோ காவல்துறையினர், இந்தத் தாக்குதலுக்கான பின்னணி என்ன, இது ஏதேனும் திட்டமிட்ட தீவிரவாதத் தாக்குதலா அல்லது கும்பல் மோதலா என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் டொராண்டோ நகரில் வசிக்கும் மக்களிடையே பெரும் பயத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.