அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - ஷாப்பிங் மால் உணவுக்கூடத்தில் மோதல்; 10 பேர் படுகாயம்!
அமெரிக்காவின் லூசியானா மாகாணம் பேட்டன் ரூஜ் பகுதியில் உள்ள ஒரு முக்கிய வணிக வளாகத்தில் இன்று அரங்கேறிய வன்முறைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வணிக வளாகத்தின் உள்ளே அமைந்துள்ள உணவுக்கூடத்தில் இன்று மதியம் இரு பிரிவினரிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், இரு குழுக்களும் தப்பொய்து வைத்திருந்த துப்பாக்கிகளை எடுத்துச் சரமாரியாகச் சுடத் தொடங்கினர்.

உணவு உண்ண வந்து கொண்டிருந்த பொதுமக்கள் இந்தத் திடீர் தாக்குதலால் சிதறி ஓடினர். இதில் குண்டு பாய்ந்தும், கூட்ட நெரிசலில் சிக்கியும் 10 பேர் படுகாயமடைந்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் அங்கிருந்து உடனடியாகத் தப்பியோடிவிட்டனர். தகவலறிந்து வந்த 'பேட்டன் ரூஜ்' போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வணிக வளாகத்தைச் சுற்றி வளைத்துள்ள போலீசார், அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் யார்? மோதலுக்கான பின்னணி என்ன? என்பது குறித்து எப்.பி.ஐ மற்றும் உள்ளூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அந்த வணிக வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
