தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு... பொதுமக்கள் பாதிப்பு!
தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் விநியோகம் செய்யும் ‘கிரீன் மேஜிக்’ - 4.5% கொழுப்புச் சத்து கொண்ட சமன்படுத்தப்பட்ட பாலுக்குக் கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் அன்றாடத் தேவைக்கு ஆவின் பாலை மட்டுமே நம்பியிருக்கும் சாமானிய பொதுமக்களும், மாதாந்திர அட்டைதாரர்களும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் காலை வேளையிலேயே கிரீன் மேஜிக் பால் பாக்கெட்டுகள் விநியோகத்திற்கு வராமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் வேறு வழியின்றி ஆவின் பாலை விட லிட்டருக்கு 10 முதல் 14 ரூபாய் வரை கூடுதல் விலை கொடுத்து, தனியார் நிறுவனங்களின் பாலை வாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

ஆவின் பாலகங்களுக்குச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பும் நுகர்வோர்கள், இந்தத் திடீர் தட்டுப்பாடு குறித்துப் பால்வளத்துறை மற்றும் ஆவின் நிர்வாகம் முன்னறிவிப்பு எதுவும் வழங்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஆவின் கிரீன் மேஜிக் பால் விநியோகம் திடீரெனக் குறைந்ததற்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் ஆவினுக்குக் கிடைக்க வேண்டிய தினசரி பால் கொள்முதல் அளவு கணிசமாகக் குறைந்துள்ளதே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் பால் உற்பத்தியாளர்களுக்குக் கூடுதல் கொள்முதல் விலை வழங்குவதால், ஆவினுக்கான பால் வரத்து அண்மைக்காலமாகக் குறைந்து வந்துள்ளது.

இவற்றுடன், ஆவின் கிரீன் மேஜிக் பாலுக்கான தயாரிப்பு மற்றும் விநியோகச் செலவுகள் தற்போது மிக அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்படும் நிதிச் சுமையைக் குறைக்கும் பொருட்டு, ஆவின் நிர்வாகம் தற்காலிகமாக இந்த வகை பால் பாக்கெட்டுகளின் உற்பத்தியைக் குறைத்துக்கொண்டு, அதற்குப் பதிலாகக் கொழுப்புச் சத்து குறைந்த 'நீல நிற' பால் பாக்கெட்டுகளின் உற்பத்தியை அதிகப்படுத்தியுள்ளதாக ஆவின் உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்தத் தட்டுப்பாட்டை விரைந்து சீரமைத்து, வழக்கம்போல் அனைத்துப் பகுதிகளிலும் ஆவின் கிரீன் மேஜிக் பால் தட்டுப்பாடின்றிக் கிடைக்கப் புதிய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
