தனியார் நிறுவனங்களின் அதிக கொள்முதல் விலையால் ஆவின் பால் தட்டுப்பாடு அபாயம்!

 
ஆவின் பால்

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்திற்கான பால் வரத்து கணிசமாகக் குறைந்து வருவதால், விரைவில் கடுமையான பால் தட்டுப்பாடு ஏற்படும் எனப் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் எச்சரித்துள்ளன. கால்நடை தீவனங்களின் விலை உயர்வு மற்றும் பராமரிப்புச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், ஆவின் வழங்கும் கொள்முதல் விலை உற்பத்திச் செலவைக் கூட ஈடுசெய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளதே இதற்கு முக்கியக் காரணமாகும்.

தற்போது ஆவின் நிர்வாகம் லிட்டருக்கு ரூ.34 முதல் ரூ.35 வரை மட்டுமே கொள்முதல் விலையாக வழங்கி வருகிறது. ஆனால், தனியார் பால் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.45 முதல் ரூ.50 வரை கணிசமான கூடுதல் தொகையை வழங்கி உடனடியாகப் பாலைக் கொள்முதல் செய்கின்றன.

ஆவின்

இதனால், ஆவின் கூட்டுறவு சங்கங்களுக்குப் பால் வழங்கி வந்த பெரும்பாலான கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள், கூடுதல் லாபம் தரும் தனியார் நிறுவனங்களுக்கும் நேரடி விற்பனைக்கும் தங்களது கவனத்தைத் திருப்பியுள்ளனர். ஆவினுக்கான தினசரி பால் கொள்முதல் வீழ்ச்சியடைந்து வருவதால், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆவின் பால் விநியோகம் பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

தனியார் நிறுவனங்களுக்கு ஈடாக ஆவின் நிறுவனமும் பால் கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்த வேண்டும் என உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கொள்முதல் விலையை உயர்த்தினால் மட்டுமே விவசாயிகள் தொடர்ந்து ஆவினுக்குப் பால் வழங்குவர் என்றும், இதன் மூலம் வரவிருக்கும் கடுமையான பால் தட்டுப்பாட்டைத் தடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.