"சிலிண்டர் தட்டுப்பாடு: 24 மணி நேர கெடு.. மத்திய அரசின் அவசர எச்சரிக்கை - ஹோட்டல்கள், உணவகங்களுக்குப் புதிய கட்டுப்பாடு!!
வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதனைச் சமாளிக்க மத்திய அரசு தற்போது போர்க்கால அடிப்படையில் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இன்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சமையல் எரிவாயுவை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் வீடுகளுக்கு வழங்கப்படும் எல்.பி.ஜி விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, வர்த்தக ரீதியான நுகர்வோரை வேறு எரிபொருளுக்கு மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா கூறுகையில், "வீட்டு உபயோக எல்.பி.ஜி மற்றும் சி.என்.ஜி நுகர்வோருக்குத் தடையின்றி எரிவாயு வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வர்த்தகப் பிரிவினர் பி.என்.ஜி எனப்படும் குழாய் வழி எரிவாயுவுக்கு மாறுவது நல்லது" எனத் தெரிவித்துள்ளார்.
வர்த்தக ரீதியான எரிவாயு நுகர்வோர்களான ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் கேட்டரிங் சேவைகள் இனி எல்.பி.ஜி சிலிண்டர்களைப் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொண்டு, குழாய் வழி எரிவாயுவுக்கு மாறுமாறு அரசு வலியுறுத்தியுள்ளது வணிக நிறுவனங்கள் பி.என்.ஜி-க்கு மாறினால், பல லட்சம் சிலிண்டர்கள் மிச்சமாகும். அந்த சிலிண்டர்களைக் கொண்டு வீடுகளுக்கான தேவையை எவ்விதத் தடையுமின்றி பூர்த்தி செய்ய முடியும் என்பதே அரசின் திட்டம்.

பி.என்.ஜி கட்டமைப்பை விரைவுபடுத்த நேற்று மத்திய அரசு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளது. அதில், நிலுவையில் உள்ள எரிவாயு குழாய் பதிக்கும் விண்ணப்பங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் அனுமதி வழங்க வேண்டும். சாலைகளைத் தோண்டுவதற்கும், சீரமைப்பதற்கும் உள்ளாட்சி அமைப்புகள் விதிக்கும் கட்டணங்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். குழாய் பதிக்கும் பணிகளை இரவு பகலாக மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் இந்தத் திட்டத்தைக் கண்காணிக்க ஒரு நோடல் அதிகாரியை நியமிக்க வேண்டும். என்று தெரிவித்துள்ளது.
நகர்ப்புறங்களில் பி.என்.ஜி இணைப்புகளைப் பெற விரும்புவோர் அந்தந்த நகர எரிவாயு விநியோக நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளலாம். மின்னஞ்சல், ஆன்லைன் போர்டல், அழைப்பு மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். பல சி.ஜி.டி நிறுவனங்கள் தற்போது புதிய இணைப்புகளுக்குக் கவர்ச்சிகரமான சலுகைகளையும், ஆரம்பக் கட்டணத் தள்ளுபடியையும் வழங்கி வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலை உயர்ந்து வருவதால், வரும் மாதங்களில் எரிபொருள் மேலாண்மை என்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
