சிலிண்டர் தட்டுப்பாடு.. குழாய் வழி எரிவாயு இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம் - எப்படி? எங்கே விண்ணப்பிப்பது? முழு விபரம்!
தமிழகத்தில் நிலவும் எல்.பி.ஜி. (திரவநிலை பெட்ரோலிய எரிவாயு) விநியோக நெருக்கடியைச் சமாளிக்க, வணிக மற்றும் தொழில் துறை நுகர்வோர் குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்புக்கு விண்ணப்பிக்குமாறு தமிழக அரசின் தொழில் துறை செயலர் அருண் ராய் கேட்டுக் கொண்டுள்ளார்.
மத்திய அரசு சமீபத்தில் வணிக மற்றும் தொழில் துறைக்கான எல்.பி.ஜி. ஒதுக்கீட்டை முதலில் 20 சதவீதமாகக் குறைத்திருந்தது. தற்போது சில நிபந்தனைகளுடன் இந்த ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்த ஒதுக்கீட்டைப் பெற விரும்பும் நுகர்வோர் பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

அனைத்து வணிக மற்றும் தொழில் துறை எல்.பி.ஜி. நுகர்வோரும், அந்தந்த எண்ணெய் நிறுவனங்களிடம் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். சிலிண்டர் தட்டுப்பாட்டைத் தவிர்க்க, தங்கள் மாவட்டங்களில் செயல்படும் நகர எரிவாயு வினியோக நிறுவனங்களிடம் குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்புக்கு உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.
சிலிண்டர்கள் தீர்ந்துவிடுமோ என்ற கவலை இன்றி 24 மணி நேரமும் எரிவாயு கிடைக்கும். சிலிண்டர்களைச் சேமித்து வைக்கத் தனி இடம் தேவையில்லை. சிலிண்டர்களை விடக் குழாய் வழி எரிவாயு அதிகப் பாதுகாப்பு உடையது மற்றும் எடை குறைவானது. எல்.பி.ஜி. சிலிண்டர்களை விடப் இயற்கை எரிவாயு விலை குறைவானது என்பதால் தொழில் நிறுவனங்களுக்குச் செலவு குறையும்.
ஹோட்டல்கள், உணவகங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்கள் வைத்திருப்போர் தங்கள் மாவட்டத்தில் எரிவாயு விநியோக உரிமம் பெற்றுள்ள நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு இந்த இணைப்பைப் பெற்றுக் கொள்ளலாம்.
