“போலீஸ் துன்புறுத்தக்கூடாதா?... முதலில் சரணடையுங்கள்”.. செந்தில் பாலாஜியின் மனுவைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு!
தவெக எம்.எல்.ஏவை பேரம் பேசி ஆட்சியைக்கவிழ்க்க முயன்ற வழக்கில், "போலீசார் தங்களை விசாரணையின்போது துன்புறுத்தக் கூடாது" எனக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியிருந்தது. நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்த 15 நாட்களுக்குள் கீழமை நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற வேண்டும் என்றும், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், இருவரும் இதுவரை ஆஜராகிச் சரணடையவில்லை.

இந்நிலையில், செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் சார்பில் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், "முன்ஜாமீன் பெற்ற நிலையில், வேறு வழக்குகளைக் காரணம் காட்டி காவல்துறையினர் எங்களைத் துன்புறுத்தவோ கைது செய்யவோ வாய்ப்புள்ளது. எனவே, விசாரணை என்ற பெயரில் காவல்துறை எங்களைத் துன்புறுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும்" எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி சரமாரியான கேள்விகளை எழுப்பினார். "ஏற்கனவே முன்ஜாமீன் வழங்கப்பட்டும் மனுதாரர்கள் இதுவரை நீதிமன்றத்தில் சரணடையவில்லை. நீதிமன்ற உத்தரவின்படி சரணடையாத பட்சத்தில், 'காவல்துறை துன்புறுத்தக்கூடாது' என எப்படி உத்தரவு கோர முடியும்?" மேலும், மற்ற வழக்குகள் தொடர்பான அச்சத்தின் அடிப்படையில் முன்கூட்டியே இத்தகைய பொதுவான உத்தரவைப் பிறப்பிக்க முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதி, செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆகிய இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டார்.
