தஞ்சாவூரில் எஸ்.ஐ மீது தாக்குதல்... வழக்கை ரத்து செய்ய கோரி இளைஞர் வேண்டுகோள்!
தஞ்சாவூரில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ள இளைஞர் ஆகாஷ், தனது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் காவல் துறையினரிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நடத்திய சாலை மறியலின் போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஆகாஷ் என்பவருக்கும் மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வெயிலில் வெகுநேரம் நின்றதால் ஏற்பட்ட மன உளைச்சலில், அங்கிருந்த காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆகாஷ், உணர்ச்சிவசப்பட்டுப் பாதுகாப்புப் பணியிலிருந்த உதவி ஆய்வாளரைத் தாக்கினார். இச்சம்பவம் தொடர்பாக ஆகாஷ் மற்றும் அவருடன் இருந்த அய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, 1 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு ஜாமீனில் வெளிவந்தனர்.
"அன்று நான் அவ்வாறு நடந்து கொண்டிருக்கக் கூடாது; தவறு இரு தரப்பிலும் உள்ளது. எனது செயலுக்குப் போலீசாரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என ஆகாஷ் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தான் பணியாற்றி வந்த கோழிப்பண்ணை வேலையிலிருந்து நீக்கப்பட்டதாகவும், இதனால் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, தன் மீதும் அய்யப்பன் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து வாழ்க்கையைத் தொடர வழிவகுக்குமாறு காவல் துறைக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
