மணல் கடத்தலைத் தடுக்கச் சென்ற எஸ்.ஐ. மீது டிராக்டர் மோதல்: தஞ்சையில் பரபரப்பு!
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளர் மீது டிராக்டர் மோதியதில் அவர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை பாபநாசம் வட்டம் கோடுகிழி பகுதியில் இன்று அதிகாலை சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துவேல் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது சட்டவிரோதமாக மணல் கடத்தி வரப்பட்ட டிராக்டரைத் தடுக்க முயன்றுள்ளார். காவல்துறையினரைக் கண்டதும் மணல் கடத்தல் டிராக்டரின் ஓட்டுநர் வாகனத்திலிருந்து குதித்துத் தப்பியோடி உள்ளார்.
இந்நிலையில் ஓட்டுநர் இன்றி தானாகச் சென்ற டிராக்டர், தடுப்பதற்கு முயன்ற எஸ்.ஐ. முத்துவேல் மீது மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார். இச்சம்பவம் குறித்து மெலட்டூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய டிராக்டர் ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
