எஸ் ஐ யை கன்னத்தில் அறைந்த இளைஞர்... சாலை மறியலில் பரபரப்பு!

 
தஞ்சை

தஞ்சை மாநகராட்சி அலுவலகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. பேனர் அகற்றப்பட்டதைக் கண்டித்துச் கட்சியினர் போராட்டத்தில் குதித்ததால் வாகனப் போக்குவரத்து முற்றிலுமாகத் தடைபட்டது. மறியலை மீறி இருசக்கர வாகனத்தில் செல்ல முயன்ற ஒரு இளைஞருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது.

இதனைத் தடுக்க முயன்ற காவலருக்கும் அந்த இளைஞருக்கும் இடையே திடீரென வார்த்தை மோதலும் கடுமையான வாக்குவாதமும் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த காவலர் அந்த இளைஞரைக் கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படும் நிலையில் அந்த இளைஞரும் பதிலுக்குக் காவலரை அறைந்தார். இதனால் போராட்டம் நடைபெற்ற இடத்தில் பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் பதற்றம் பற்றிக்கொண்டது.

உடனடியாகக் காவல்துறையினர் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானம் செய்து நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். காவல் துறையினரைத் தாக்கியது தொடர்பாக அந்த இளைஞரைக் கைது செய்துள்ள போலீசார் அவரிடம் தீவிரமான விசாரணையை நடத்தி வருகின்றனர். பொதுஇடத்தில் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நடைபெற்ற இந்த மோதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.