விஜய் உடையில் வந்து வாக்களித்த சிபிராஜ் - ஒரே குடும்பத்தில் 3 அரசியல் பாதைகள்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தனது வாக்கைச் செலுத்துவதற்காக வந்த நடிகர் சிபிராஜ், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைப் போன்றே உடை அணிந்து வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இன்று காலை வாக்களிக்க வந்த சிபிராஜ், தவெக தலைவர் விஜய் பிரசாரங்களின் போது அணியும் அதே பாணியிலான உடையை அணிந்திருந்தார். முன்னதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில், "வென்று வா தலைவா.. நாங்க இருக்கோம்" என விஜய்க்கு ஆதரவாகப் பதிவிட்டு, தனது அரசியல் ஆதரவு யாருக்கு என்பதை வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டார்.

சிபிராஜின் இந்த நடவடிக்கை ஒருபுறம் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், அவரது குடும்ப உறுப்பினர்களின் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகள் தற்போது பேசுபொருளாகியுள்ளன: தீவிர திராவிடச் சிந்தனையாளரான நடிகர் சத்யராஜ், இந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக மாநிலம் தழுவிய அளவில் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 2025-ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்த சகோதரி திவ்யா சத்யராஜ் , தற்போது அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து பணியாற்றி வருகிறார். தனது தந்தை மற்றும் சகோதரி திமுகவில் இயங்கி வரும் நிலையில், சிபிராஜ் மட்டும் விஜய்யின் தவெக-விற்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக நாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு அரசியல் கட்சிகளுக்குத் தங்களது ஆதரவை வழங்கி வருவது, அரசியலில் நிலவும் ஆரோக்கியமான போக்கைப் பிரதிபலிப்பதாகச் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
