பிரபல சின்னத்திரை நடிகர் சித்தார்த் வேணுகோபால் காலமானார் - நடிகை சீமா உருக்கம்!
பிரபல மலையாள சீரியல் நடிகர் சித்தார்த் வேணுகோபால் (41), புற்றுநோய் பாதிப்பு காரணமாக நேற்று காலமானார். அவரது மறைவு மலையாளத் திரையுலகினரையும், ரசிகர்களையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடியைப் பூர்வீகமாகக் கொண்ட சித்தார்த், கடந்த இரண்டு ஆண்டுகளாகப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காகத் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையிலும், சிகிச்சை பலனின்றி நேற்று அவரது உயிர் பிரிந்தது.
சித்தார்த்தின் மறைவுச் செய்தியைப் பகிர்ந்துள்ள அவரது நெருங்கிய தோழியும், நடிகையுமான சீமா ஜி நாயர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "எல்லா நம்பிக்கைகளும் அற்றுப் போய்விட்டன. என் தம்பி சித்தார்த் வேணுகோபால் வலியற்ற உலகிற்குப் பயணம் செய்துவிட்டான். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவனை மீட்டெடுக்க என் மனமும் உடலும் சோர்வடைந்த நிலையிலும் போராடினேன். ஆனால் அவன் இனிமேலும் துன்பப்படக்கூடாது என்று கடவுள் தீர்மானித்துவிட்டார் போலிருக்கிறது. என்னால் இதைத் தாங்க முடியவில்லை சித்தார்த், நான் உடைந்து அழுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

மலையாளத் தொலைக்காட்சித் துறையின் முக்கிய நட்சத்திரமான சித்தார்த்தின் மறைவுக்குப் பல முன்னணி நடிகர், நடிகைகள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் அவருக்கு ‘கண்ணீர் அஞ்சலி’ செலுத்தி வருகின்றனர். நோயின் பிடியில் இருந்து மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது மரணம் எதிர்பாராத ஒன்றாக அமைந்துள்ளது.
