மசினகுடி யானை வழித்தடத்தில் 12 கட்டடங்கள் இடிப்பு

 
மசினகுடி

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசினகுடி அருகே உள்ள சீகூர் யானை வழித்தடம், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே யானைகள் இடம்பெயர முக்கியப் பாதையாக உள்ளது. இப்பகுதியில் அனுமதியற்ற தங்கும் விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்ட கட்டடங்களால் யானைகளின் நடமாட்டம் பாதிக்கப்படுவதாக வழக்கு தொடரப்பட்டது.

யானை வழித்தடத்தில் 12 கட்டடங்கள் இடிப்பு

இதையடுத்து, சீகூர் யானை வழித்தடத்தை வரையறுத்து 2010-ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து விடுதி உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். 2018-ம் ஆண்டு விசாரணையின்போது, மசினகுடி சுற்றுவட்டாரத்தில் 39 கட்டடங்களில் 309 அறைகள் இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்தது. தொடர்ந்து அந்தக் கட்டடங்களுக்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டது.

பின்னர் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுவின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து, ஒரு விடுதியில் 11 கட்டடங்களும், மற்றொரு விடுதியில் ஒரு கட்டடமும் என மொத்தம் 12 கட்டடங்கள் போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.