சிக்கிம் சுரங்க விபத்து... உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு - மீட்புப் பணிகள் தீவிரம்!

 
சிக்கிம் சுரங்க விபத்து

சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாகச் சுரங்கம் இடிந்து விழுந்து நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக இடிபாடுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததாக மாநில முதலமைச்சர் பிரேம் சிங் தமங் தெரிவித்திருந்த நிலையில், மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற தீவிர மீட்பு நடவடிக்கைகளின் போது, இடிபாடுகளுக்குள் இருந்து மேலும் 14 தொழிலாளர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தச் சுரங்க நிலச்சரிவு விபத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 22 ஆக அதிகரித்துள்ளது.

சிக்கிம் சுரங்கப்பாதை ஆம்புலன்ஸ் விபத்து நிலச்சரிவு

மீட்கப்பட்ட தொழிலாளர்களின் உடல்கள் அனைத்தும் உடற்கூறாய்வு மற்றும் பிரேதப் பரிசோதனைக்காகக் கேங்டாக் நகரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. சுரங்க இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்பதால் மீட்புக் குழுவினர் தொடர்ந்து களத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிலச்சரிவில் சிக்கியுள்ளதாகக் கருதப்படும் மீதமுள்ள 3 தொழிலாளர்களைப் பாதுகாப்பாக மீட்கும் பணியில் மீட்புப் படை வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு அரசு தரப்பில் ஆறுதல் தெரிவிக்கப்பட்டு வருவதுடன், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.