வெள்ளி விலையில் கிலோவுக்கு ரூ.20,000 சரிவு... நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட வெள்ளி விலை, தற்போது கணிசமான சரிவைக் கண்டுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் ஒரு கிலோ வெள்ளிக்கு சுமார் 20,000 ரூபாய் வரை குறைந்துள்ளது முதலீட்டாளர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி நிலவரப்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.280-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,80,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும், சர்வதேசச் சந்தையில் நிலவும் போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், முதலீட்டாளர்கள் தங்கள் கவனத்தை மற்ற துறைகளுக்குத் திருப்பியுள்ளனர். இதன் விளைவாகப் Precious Metals எனப்படும் தங்கம் மற்றும் வெள்ளியின் தேவை குறைந்து விலை இறங்கியுள்ளது.

கடந்த 10 நாட்களாக ரூ.270, ரூ.265 எனப் படிப்படியாகக் குறைந்த வெள்ளி விலை, இன்று மேலும் சரிவைச் சந்தித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி: ரூ. 260, ஒரு கிலோ வெள்ளி: ரூ. 2,60,000 விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலையில் விலையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இன்றி, நேற்றைய சரிந்த விலையிலேயே வர்த்தகம் நீடிக்கிறது. கடந்த 10 நாட்களில் கிலோவுக்கு ரூ.20,000 குறைந்துள்ளதால், வெள்ளி ஆபரணங்கள் மற்றும் பொருட்கள் வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்கள் இந்தச் சரிவைச் சாதகமாகப் பார்க்கின்றனர்.

கச்சா எண்ணெய் விலை உயரும்போது, உற்பத்திச் செலவுகள் அதிகரித்துச் சந்தையில் பணவீக்கச் சூழல் உருவாகிறது. இது முதலீட்டாளர்களை எச்சரிக்கையுடன் செயல்பட வைக்கிறது. டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவதால், சர்வதேசச் சந்தையில் மற்ற நாட்டு கரன்சிகளுக்கு வெள்ளியின் விலை அதிகமாகத் தெரிவதும் ஒரு காரணமாகும்.
