சிங்கம்புணரி அருகே தொழிலதிபர் வீட்டில் ரூ.75 லட்சம் மதிப்பிலான நகை, வெள்ளி கொள்ளை!

 
சிங்கம்புணரி

 

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பூட்டியிருந்த தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், 50 பவுன் தங்க நகைகள், 12 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் அருகே உள்ள உலகம்பட்டி சேங்கை ஊரணி வீதியைச் சேர்ந்தவர் நடராஜன் (66). இவர் கரூரில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவரது சகோதரர்களான நாச்சியப்பன் (62), சிங்காரம் (58) ஆகியோரும் குடும்பத்துடன் வெளியூர்களில் தங்கி தொழில் செய்து வருகின்றனர். இதனால் உலகம்பட்டியில் உள்ள இவர்களது வீடு பெரும்பாலும் பூட்டியே கிடக்கும்.

நகை கொள்ளை

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், சம்பவத்தன்று நள்ளிரவில் வீட்டின் கதவுகளில் இருந்த பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் தனி அறையில் இருந்த அலமாரிகளை உடைத்து, அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 50 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பிள்ளையார் சிலை, வெள்ளி காமாட்சி விளக்கு உள்ளிட்ட சுமார் 12 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.

போலீசார் ரோந்து போலீஸ் காவலர் கொலை கொள்ளை

வீட்டின் கதவுகள் திறந்து கிடப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து நடராஜனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சொந்த ஊருக்கு வந்த அவர், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது நகை, வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து உலகம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களைச் சேகரித்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

கொள்ளை நடைபெற்ற இடத்தைச் சுற்றி சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததை மர்ம நபர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் கொள்ளையர்கள் குறித்த துப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவின்பேரில், திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் சண்முகம் சுந்தரம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரொக்கப் பணம் என மொத்தம் சுமார் ரூ.75 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது