அரசே தொடங்கிய ‘டேட்டிங் ஆப்’! ஒரே ஒரு ஜோடியை மட்டும் தேர்வு செய்யும் சிங்கப்பூர் FirstDate
சிங்கப்பூரில் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக இருக்கும் இளைஞர்களுக்கு பொருத்தமான துணையை கண்டுபிடிக்கும் வகையில், அந்நாட்டு அரசு சார்பில் ‘FirstDate’ என்ற புதிய டேட்டிங் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமான டேட்டிங் செயலிகளைப் போல ஏராளமான நபர்களை ஸ்வைப் செய்து தேர்வு செய்யும் முறைக்கு பதிலாக, ஒரே நேரத்தில் ஒரு பொருத்தத்தை மட்டுமே பரிந்துரைப்பது இதன் சிறப்பம்சமாகும்.
சிங்கப்பூர் அரசின் தொழில்நுட்ப நிறுவனமான GovTech உருவாக்கியுள்ள இந்த FirstDate சேவை தற்போது சோதனை முறையில் செயல்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக 21 முதல் 35 வயதுக்குட்பட்ட திருமணமாகாத அரசு ஊழியர்கள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும். இந்த திட்டம் பொதுமக்கள் அனைவருக்கும் விரிவுபடுத்தப்படுமா என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்த சேவையில் பங்கேற்பவர்கள் சிங்கப்பூரின் Singpass டிஜிட்டல் அடையாள அமைப்பு மூலம் தங்கள் அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும். பின்னர் தங்களின் ஆர்வங்கள், வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள், மதிப்புகள், உறவு தொடர்பான விருப்பங்கள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.
இந்த தகவல்களின் அடிப்படையில், ‘Gale-Shapley Stable Marriage Algorithm’ எனப்படும் கணித அடிப்படையிலான பொருத்தம் காணும் முறையை பயன்படுத்தி இணைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த அல்காரிதம் 2012-ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுடன் தொடர்புடைய matching theory-யை அடிப்படையாகக் கொண்டது.
வழக்கமான டேட்டிங் செயலிகளில் ஒரே நேரத்தில் ஏராளமான நபர்களின் சுயவிவரங்களை பார்க்க முடியும். ஆனால் FirstDate-ல் ஒவ்வொரு matching cycle-லும் ஒரு நபருக்கு ஒரு பொருத்தம் மட்டுமே வழங்கப்படும். இருவரும் அந்த அறிமுகத்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அவர்களின் தொடர்பு விவரங்கள் பகிரப்படும்.
அதிகமான தேர்வுகள் காரணமாக ஏற்படும் ‘swipe fatigue’ எனப்படும் சோர்வை குறைத்து, ஒருவரை ஒருவர் நிதானமாக அறிந்துகொள்ளும் வாய்ப்பை உருவாக்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும் என்று GovTech தெரிவித்துள்ளது.சிங்கப்பூரின் பிறப்பு விகிதம் 2025-ல் 0.87 ஆக குறைந்துள்ள நிலையில், திருமணம் மற்றும் குடும்ப அமைப்பை ஊக்குவிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது. அந்தப் பின்னணியில் FirstDate திட்டமும் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
