சிங்கப்பூர் புறப்பட்ட இண்டிகோ விமானம் அவசரமாக திருச்சியில் தரையிறக்கம்... தொழில்நுட்பக் கோளாறால் பயணிகள் அவதி!

 
இண்டிகோ விமானம் திருச்சி

திருச்சியில் இருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்ட இண்டிகோ பயணிகள் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மீண்டும் திருச்சி விமான நிலையத்திற்குத் திரும்பியது.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஆகஸ்ட் 21 மாலை 6:43 மணிக்கு 126 பயணிகளுடன் இண்டிகோ விமானம் சிங்கப்பூர் நோக்கிக் கிளம்பியது. விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களில் அதன் இயக்கத்தில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது.

இண்டிகோ

கோளாறு கண்டறியப்பட்டதும், விமான ஓட்டிகள் உடனடியாகத் திருச்சி விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தனர். பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்காக விமானம் வானில் சுமார் 20 நிமிடங்கள் வட்டமடித்ததால் பயணிகள் இடையே சிறிது நேரம் பரபரப்பும் அச்சமும் நிலவியது.

கட்டுப்பாட்டு அறையின் அனுமதியைத் தொடர்ந்து, விமானம் திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் எவ்வித காயமுமின்றிப் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர். தொழில்நுட்பக் கோளாறைச் சரிசெய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் குறித்து விமான நிறுவன அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.