நூதன முறையில் நகை திருட்டில் ஈடுபட்ட அக்கா, தம்பி கைது!
வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நகைக்கடைகளில் நூதன முறையில் தங்க நகைகளைத் திருடி வந்த அக்கா மற்றும் தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம், பேரணாம்பட்டு மற்றும் பள்ளிகொண்டா ஆகிய பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் கடந்த சில மாதங்களாகத் தங்க நகைகள் மர்மமான முறையில் காணாமல் போய் வந்துள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர்கள் கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் வாடிக்கையாளர்கள் போல் வந்து நூதன முறையில் நகைகளைத் திருடும் காட்சிகள் பதிவாகியிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த சிசிடிவி காட்சிகளை நகைக்கடை உரிமையாளர்கள் தங்களுக்கிடையேயான வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்து எச்சரிக்கையாக இருக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது குறித்துப் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய குடியாத்தம் காவல்துறையினர், அப்பகுதியைச் சேர்ந்த திருப்பதி மற்றும் தெய்வானை ஆகிய அக்கா, தம்பி இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
