சொத்து தகராறில் கொடூரம்... தங்கையை வெட்டிக் கொன்று மைத்துனரின் கையைத் துண்டித்த அண்ணன்!

 
தீப ஆரத்தி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பூர்வீக சொத்து தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பெற்ற தங்கையே வெட்டிக்கொல்லப்பட்ட சோகம் அரங்கேறியுள்ளது. காட்டுவண்ணஞ்சூர் பகுதியைச் சேர்ந்த காந்தகுமார் என்பவருக்கு தீப ஆர்த்தி உட்பட 2 தங்கைகள் இருந்த நிலையில் தாயார் காலமானார். தாயின் எட்டாம் நாள் துக்க நிகழ்வின் போது 80 செண்ட் அளவுள்ள பூர்வீக நிலத்தில் தீப ஆர்த்தி தனது பங்கைக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அண்ணன் காந்தகுமார் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தங்கை மீது கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளார்.

ஆம்புலன்ஸ்

சொத்தில் உரிமை கேட்ட தங்கையை அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது மனைவியைக் காப்பாற்றப் பதறி அடித்துக்கொண்டு ஓடிவந்த கணவர் மீதும் கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டது. தடுத்து நிறுத்த முயன்ற தீப ஆர்த்தியின் கணவரின் கையை வெறியுடன் காந்தகுமார் வெட்டியதில் கை துண்டாகி விழுந்தது. இரத்தக் வெள்ளத்தில் சரிந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

போலீஸ்

இந்தக் கொடூரச் சம்பவத்தை அரங்கேற்றிய பிறகு காந்தகுமார் தனது 5 கூட்டாளிகளுடன் அங்கிருந்து தலைமறைவாகி தப்பிச் சென்றுவிட்டார். தகவலறிந்து வந்த காவல் துறையினர் தீப ஆர்த்தியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தலைமறைவாக உள்ள அண்ணன் காந்தகுமார் மற்றும் அவரது கூட்டாளிகளைப் பிடிக்கக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். சொத்துக்காகப் பெற்ற தங்கையையே கொன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.