திருப்பதியில் சீதா-ராமர் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம் - யானை மீது முத்துமாலைகள் ஊர்வலம்!

 
சீதா-ராமர் திருக்கல்யாணம் திருப்பதி  உற்சவம் சீதா-ராமர் திருக்கல்யாணம் திருப்பதி  உற்சவம்

திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஸ்ரீராம நவமி பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக, சீதா-ராமர் திருக்கல்யாண உற்சவம் மிக விமரிசையாக நடைபெற்றது. இதில் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருக்கல்யாண உற்சவத்தின் போது சுவாமிக்கு அணிவிக்கப்படும் விசேஷ முத்துமாலைகள், திருமலை திருப்பதி தேவஸ்தான (TTD) நிர்வாகக் கட்டிடத்தில் உள்ள கருவூலப் பிரிவில் இருந்து கொண்டு வரப்பட்டன. முன்னதாக, கருவூல அதிகாரிகள் இந்த முத்துமாலைகளுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டனர்.

சீதா-ராமர் திருக்கல்யாணம் திருப்பதி  உற்சவம்

பூஜை செய்யப்பட்ட முத்துமாலைகள் அலங்கரிக்கப்பட்ட யானை மீதுள்ள அம்பாரியில் வைக்கப்பட்டு, மங்கல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டன. தேவஸ்தான நிர்வாகக் கட்டிடத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம், தீர்த்தக்கட்ட வீதி, காந்தி ரோடு, கோவிந்தராஜர் கோவில் தெற்கு மாட வீதி மற்றும் பஜார் வீதி வழியாகக் கோவிலைச் சென்றடைந்தது. கோவிலை அடைந்ததும், முத்துமாலைகள் பிரதான அர்ச்சகர் ஆனந்தகுமார் தீட்சிதரிடம் முறையாக ஒப்படைக்கப்பட்டன.

மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஆகம விதிகளின்படி சீதா-ராமர் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது, யானை மீது ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்ட முத்துமாலைகள் சீதா-ராமருக்கு அணிவிக்கப்பட்டன. இந்தத் தெய்வீகத் திருமணக் கோலத்தைக் காணத் திருப்பதியின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

சீதா-ராமர் திருக்கல்யாணம் திருப்பதி  உற்சவம்

இந்த வைபவத்தில் கோவில் துணை அதிகாரி நாகரத்னா, கோவில் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் தேவஸ்தான முக்கிய அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாவையொட்டி கோதண்டராமர் கோவில் முழுவதும் வண்ண விளக்குகளாலும், நறுமண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.